தமிழ்நாட்டில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு, அவற்றை தீர்த்து வைக்கும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களின் குறைகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இதில் ஊரக பகுதியில், 15 அரசு துறைகள் மூலம் 45 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதியில், 13 அரசு துறைகள் மூலமாக 43 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாம் காலை 9:00 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தில் தகுதி இருந்தும், விண்ணப்பிக்காதவர்கள் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப படிவங்கள், இந்த முகாமில் மட்டுமே கிடைக்கும். வேறு யாரிடமும் இந்த படிவங்கள் கிடையாது. தகுதியுள்ள பெண்கள் முகாமிற்கு சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கு தேவையான ஆவணங்களையும், அங்கேயே சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்கள்
- 5 ஏக்கருக்கும் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்.
- 21 வயது பூர்த்தியடைந்த பெண்கள்.
- ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
- ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் போன்ற பிற அரசு உதவித்தொகைகளை பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தகுதியற்றவர்கள்
- சொந்த பயன்பாட்டிற்கு கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள்.
- அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்.
- வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்தும் குடும்பத்தினர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
- குடும்ப அட்டை
- சமீபத்திய மின்சார கட்டண ரசீது
இந்த முகாமை பயன்படுத்தி தகுதி உள்ள பெண்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
