கோவையில் அரங்கேறிய ‘ஹத்ராஸ்’ கொடுமை?.. இரவோடு இரவாக சடலத்தை எரித்த போலீஸ்… சூலூரில் நடந்தது என்ன?.. விஜய் அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 2020-ஆம் ஆண்டின் உத்தர பிரதேச ‘ஹத்ராஸ்’ கொடூரத்தை நினைவூட்டுவதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஹத்ராஸ் சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு நள்ளிரவில் உடலை உபி காவல் துறை அவசரமாகத் தகனம் செய்தது. அதேபோன்ற ஒரு பாசிச நடைமுறை தற்போதைய விஜய் தலைமையிலான தமிழக அரசிலும் அரங்கேறியுள்ளது பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், “முதல்வர் விஜய் நேரில் வந்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம்” என இஎஸ்ஐ மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த வேளையில், காவல் துறையினர் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக உடலைக் கடத்திச் சென்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. பெற்ற தாயின் அனுமதியோ, விருப்பமோ இல்லாமல், மகளின் முகத்தைக் கூடக் காட்டாமல் நள்ளிரவில் அவசர அவசரமாகச் சேலத்தில் உடலைத் தகனம் செய்த காவல் துறையின் செயல்பாடு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியை மறைக்க அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அப்பட்டமாகக் காட்டுவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

   

தேர்தல் பிரச்சாரங்களின் போது வட மாநிலங்களின் சட்டம் ஒழுங்கைச் சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் சி. ஜோசப் விஜய், இன்று அவரது சொந்த ஆட்சியிலேயே ஒரு தாயின் இறுதி அஞ்சலி உரிமையைப் பறிக்கும் நிலையை அனுமதித்துள்ளது அவரது அரசின் மீதான கடுமையான விமர்சனமாக மாறியுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தில் வழக்கை திசைதிருப்ப முயன்றது போல, இங்கும் தமிழக ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சிறுமியின் தாய் குறித்து அவதூறுகளைப் பரப்புவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் குற்றவாளி இருப்பது போன்ற போலி ஏஐ (AI) புகைப்படங்களை உருவாக்கி நரேட்டிவை மாற்ற கார்ப்பரேட் பாணியில் வேலை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய இந்தச் செயல் விஜய் அரசின் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு கறையாக நிலைத்து நிற்கும் என எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.