கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரது அடையாள அட்டையை ஒரு கும்பல் பறித்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை சிவக்குமார் அந்த இளைஞர்களிடம் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த கும்பல் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
விசாரணையில், சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, அந்த கும்பல் வீட்டிலிருந்த ரூ. 1.5 லட்சம் பணம் மற்றும் நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை தரப்பில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக அவர்கள் போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். அதோடு மட்டுமின்றி, இந்தச் சம்பவம் தங்கள் எல்லைக்குட்பட்டது அல்ல என்று கூறி, மதுக்கரை காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அலைக்கழித்ததாகவும் சிவக்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
