இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே போல் தனது மனைவி வீட்டு வேலைகள் மட்டும் செய்தால் போதும், அவளுக்கு வேறு ஆசைகள் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பல கணவன்மார்களுக்கும் இருக்கிறது. இந்த தடைகளை எல்லாம் உடைத்து சாதனை படைத்து தனது குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாகவும் திகழ்ந்து வருபவர்தான் ஆனந்தி ரகுபதி.
ஆனந்தி, பள்ளி படிப்பில் அவ்வளவாக சிறந்து விளங்கவில்லை என்றாலும், அவருக்கு தனது வாழ்வில் பெரிதளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் இருந்தது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றிய ஆனந்திக்கு ஒரு கட்டத்தில் எல்லா பெண்களைப் போல திருமணமும் நடந்தது.
ஆனால் திருமணம் முடிந்த கையோடு தனது வேலையையும் ராஜினாமா செய்து தனது கணவனையும் கணவன் வீட்டையும் கவனிக்க வேண்டிய சூழல் வந்தது. நடுவில் ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனாலும் உள்ளுக்குள் நாம் எதாவது சாதிக்க வேண்டும் என்ற தீ மட்டும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
அந்த சமயத்தில்தான் அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டோம். குழந்தை பிறப்பையும் வளர்ப்பையும் குறித்து மற்றவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் பயிற்சி கொடுக்கலாம் என அவருக்கு தோன்றியது. அதன்படி குழந்தை பிறப்பு பயிற்சியாளராக ஆனார். அதற்கான தகுதியை பெற குழந்தை பிறப்பு பயிற்சிக்கான கல்வியையும் பெற்றார்.
2011 ஆம் ஆண்டு “ஹேப்பி மதர்ஹூட்” என்ற பெயரில் தனது தொழிலை தொடங்கினார் ஆனந்தி. பல கர்ப்பிணி பெண்களை இலவச குழந்தை பிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி அணுகினார். ஆனால் பல பெண்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் குழந்தை பிறப்பு பயிற்சி என்ற ஒன்றே அப்போதுள்ள பெண்களுக்கு புதிதான ஒன்றாகவும் கேள்விபடாத ஒன்றாகவும் இருந்தது.
எனினும் விடாப்பிடியாக பல கர்ப்பிணி பெண்களை சந்தித்து இது குறித்து பேசத்தொடங்கினார். அதன் பின் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து அவரது தொழில் அமோக சூடுபிடித்தது. சென்னையிலேயே பல கிளைகளை திறந்தார். பல கர்ப்பிணி பெண்கள் அவரை தேடி வரத்தொடங்கினார்கள். சென்னை மட்டுமல்லாது தமிழகம் தாண்டி பல மாநிலங்களையும் அமெரிக்கா போன்ற நாடுகளையும் சேர்ந்த பல கர்ப்பிணி பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கத்தொடங்கினார். ஆதலால் கொரோனா காலகட்டத்தில் இவரது தொழில் மேலும் சூடுபிடித்தது. இன்று தமிழ் சமூகத்தில் ஒரு சிங்ப்கபெண்ணாக குறிப்பிடத்தக்க சாதனைகளை தனது “ஹேப்பி மதர்ஹூட்” நிறுவனத்தின் மூலம் சாதித்து வரும் ஆனந்தி, பல House Wifeகளுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருகிறார்.