“நடுக்கடலில் எமபாசம்!”… ஹோண்டியஸ் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ்.. 3 பேர் பலி.. பீதியில் உலக நாடுகள்..!!

By Muthu Mani on வைகாசி 11, 2026

Spread the love

நெதர்லாந்து நாட்டின் ‘எம்பி ஹோண்டியஸ்’ (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று கண்டறியப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலில் இருந்த 3 பயணிகள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, நடுக்கடலிலேயே கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது. பின்னர், கப்பலில் இருந்த அனைவரும் ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனையின் முடிவில், கப்பல் குழுவில் பணியாற்றி வரும் இரண்டு இந்தியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பாதிக்கப்பட்ட இரு இந்தியர்களும் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் உடல்நிலை சீராக இருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே நிலவி வந்த அச்சத்தைப் போக்கியுள்ளது.

   

தற்போது முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அந்த இரு இந்தியர்களும் மேலதிக சிகிச்சைக்காக நெதர்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான உயர்தர மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. கப்பலில் ஏற்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை மீண்டும் ஒருமுறை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தூண்டியுள்ளது.