தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்துள்ளது. அரூர் அருகே உள்ள வேட்ரப்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அரூர் திரு.வி.கா நகரில் ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வருகின்றார். இதனிடையே தன்னுடைய ஜிம்முக்கு வந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் சிலம்பரசன் நெருங்கி பழகியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் மாணவி தன்னுடைய தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த சிலம்பரசன் வீட்டில் விட்டு செல்கிறேன் என்னுடன் வா என்று கூறி மாணவியை காரில் ஏற்றினார். ஆனால் வீட்டுக்கு செல்லாமல் கடத்தூர் செல்லும் சாலைக்கு காரை மாற்றிச் சென்றுள்ளார். அங்கு காரை ஓரமாக நிறுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என்று கூறியும் மிரட்டி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் பகிர்ந்த நிலையில் உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்துள்ளனர். சிலம்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது மனைவியிடமிருந்து பிரிந்து வசித்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
