தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கொங்கு மண்டலப் பிரச்சாரத்தின்போது செங்கோட்டையனின் அழைப்பை ஏற்று, குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்குவதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த முடிவு செங்கோட்டையன் தரப்பிற்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருந்தாலும், தவெகவின் மற்ற மூத்த நிர்வாகிகளிடையே ஒருவித அதிருப்தியையும் புலம்பலையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசல் காரணமாக வில்லிவாக்கத்தில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்படியாவது விஜய்யை மீண்டும் வில்லிவாக்கத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதால், கட்சிக்குள் ஒருவித மறைமுக மோதல் நிலவி வருகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவில் சீனியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருபுறம் விஜய் தனது மேலாளர் ஜெகதீஷ் மூலம் தேர்தல் பயணத் திட்டங்களை மும்முரமாக வகுத்து வரும் நிலையில், மறுபுறம் நிர்வாகிகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் தவித்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், இந்தச் சலசலப்புகளைக் கடந்து தவெகவின் பிரச்சார வியூகம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
