ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேச அரசியல் சூழல்களால் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில், ரஷ்யாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ள கச்சா எண்ணெய் கப்பல் தமிழக இல்லத்தரசிகளுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், வருகிற 25, 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்னை துறைமுகம் வந்தடைய உள்ளது. பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போரினால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகளுடனான வர்த்தகம் முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரை நோக்கி உயர்ந்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா போன்ற நட்பு நாடுகளை நாடியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘நோபிள் வாக்கர்’ என்ற கப்பல் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் சென்னை வந்தடைந்துள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியிலும், இந்தியா தனது இறக்குமதி கொள்கையில் காட்டிய உறுதி தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் இந்தச் சூழலில், ரஷ்யாவிலிருந்து வந்துள்ள இந்த கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPCL) போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் போது உபரிப் பொருளாகக் கிடைக்கும் சமையல் எரிவாயு (LPG), சிலிண்டர் விநியோகச் சங்கிலியைச் சீராக்க உதவும். இதனைத் தொடர்ந்து ‘சிரியஸ் 1’ உள்ளிட்ட மேலும் பல கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் சென்னை வரவிருப்பது, மாநிலத்தின் ‘பஃபர் ஸ்டாக்’ எனப்படும் கையிருப்பை உயர்த்த வழிவகை செய்யும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்குச் சுமார் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் சிலிண்டர்கள் வரை தேவைப்படுகின்றன. போர் பதற்றத்தால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தட்டுப்பாட்டினால், முன்பதிவு செய்த 15 நாட்கள் வரை சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது வந்துள்ள இந்த ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் மற்றும் அடுத்த வாரம் வரவிருக்கும் கூடுதல் வரத்துகள் மூலம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், இந்த மாற்று ஏற்பாடுகள் மூலம் தமிழகச் சமையலறைகளில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
