செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, மது போதையில் பேரன் அடித்ததில் பாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த சரோஜா (70) என்ற முதியவர், நேற்று (ஜூன் 09) தனது வீட்டின் வாசலில் உள்ள கட்டிலில் படுத்துக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அவரது பேரன் மகேஷ் (26), பாட்டி புலம்புவதைக் கண்டு ஆத்திரமடைந்து அவரது கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரோஜா, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கல்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சரோஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற பேரன் மகேஷை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் பெற்ற பாட்டியையே பேரன் அடித்துக் கொன்ற இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
