அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், ராஜபாளையம் தொகுதி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியை பெரிதும் நம்பியிருந்த நடிகை கவுதமி மற்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களாக ராஜபாளையம் தொகுதியில் முகாமிட்டு, பல லட்சங்களைச் செலவு செய்து தேர்தல் பணிகளைச் செய்து வந்த கவுதமிக்கு, இந்த முடிவு பேரிடியாக அமைந்துள்ளது.
“உங்களுக்குத்தான் சீட்” என்று எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியை நம்பியே தான் இவ்வளவு மெனக்கெட்டதாகவும், தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கவுதமி தனது நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறார். தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியது மட்டுமின்றி, இது குறித்துப் பேச எடப்பாடியைத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்பதும் கவுதமியின் கோபத்தை அதிகரித்துள்ளது. ஒருவேளை முன்பே தெளிவுபடுத்தியிருந்தால் தான் இவ்வளவு பணத்தையும், நேரத்தையும் வீணடித்திருக்க மாட்டேன் என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், பாஜகவின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தனது நண்பர் ஒருவருக்கு ராஜபாளையம் தொகுதியைப் பெற்றுத் தருவதாக அவர் ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்ததாகவும், இதற்கு எடப்பாடி பழனிசாமியும் பச்சைக்கொடி காட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் நயினாரின் கோரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி கட்சிக்கு அத்தொகுதியை ஒதுக்கியது பாஜக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக மற்றும் அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு மயிலாப்பூர், கோவை வடக்கு உள்ளிட்ட 27 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அமமுக-விற்கு பெரியகுளம், சைதாப்பேட்டை உள்ளிட்ட 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாலும், சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளைச் சமாதானப்படுத்துவது எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது.
