“இது வாழ்வா சாவா போராட்டம்..!” காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்…!

By Swetha on ஆனி 12, 2026

Spread the love

டெல்லியில் நடந்த ‘காக்ரோச் ஜந்தா கட்சி’ போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானா அரசுப் பள்ளி கௌரவ ஆசிரியை சுலேகா தலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 6 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, ரோஹ்தக் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஜூன் 8 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவில் அதற்கான முறையான காரணங்கள் எதுவும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி, முன் அனுமதி பெறாமல் அவர் டெல்லி போராட்டத்திற்குச் சென்றதே இதற்குக் காரணம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் சுலேகா தலால் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “இது ஒரு வாழ்வா சாவா போராட்டம், இப்போது ஒரு தாயாக நான் களமிறங்கியுள்ளேன்” என்று அவர் பேசியிருந்தார்.

   

இது குறித்து விளக்கமளித்துள்ள ஆசிரியை சுலேகா தலால், “போட்டித் தேர்வுகளுக்காக இரவும் பகலும் கடினமாகப் உழைக்கும் நாட்டின் பிள்ளைகளுக்கு ஆதரவாகவும், ஒரு தாயின் வேதனையோடுமே நான் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். எனது மகனும் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளான். நான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவள் அல்ல” என்று கூறியுள்ளார். மேலும், முறையான விளக்கம் கேட்காமல் அரசு எடுத்துள்ள இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு தான் அஞ்சப்போவதில்லை என்றும், மாணவர்களின் நலனுக்கான தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.