கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தில் பள்ளியில் கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது பள்ளிக்கல்வித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் ராமத்தம் அடுத்த வி.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பாலமுருகன். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற மாணவன் பள்ளிக்கு திரும்பவில்லை. தேடிய போது அந்த பகுதியில் இருந்த கிணற்றில் அவர் கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 26ஆம் தேதி விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவருடைய அறிக்கையில், “பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு கழிப்பறை பராமரிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு கழிப்பறை இருந்தும் அது சரியாக பராமரிக்கப்படாததால் அதை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாணவர் பாலமுருகன் பள்ளி வளாகத்திற்கு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கழிவுறையை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் மாணவன் பாலமுருகன் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இது பெற்றோர், மாணவ, மாணவியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
