உப்புக்கு பதிலா சலவைத்தூளா?… சமையலறையில் உச்சக்கட்ட அலட்சியம்… 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அரசு அதிரடி விசாரணை உத்தரவு…!!

By Gayathri on ஆவணி 20, 2026

Spread the love

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பராசி அரசு நடுநிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சோயாபீன் சாதத்தில் உப்பு குறைவாக இருப்பதாக சில மாணவர்கள் கூறியுள்ளனர். அப்போது, சமையலறையில் உப்பும் சலவைத்தூளும் ஒரே இடத்தில் அருகருகே வைக்கப்பட்டிருந்ததால், சமையல்காரர் கவனக்குறைவாக சலவைத்தூளை எடுத்து உணவில் கலந்துள்ளார். இந்த சலவைத்தூள் கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்குச் சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியிலேயே முதலுதவி வழங்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பீகார் ஷெரீப் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது குழந்தைகள் அனைவரும் அபாய கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், உணவு தயாரிப்பில் நடந்த இந்த கடுமையான அலட்சியம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.