“TAPS குளறுபடி… வெளிமுகமை நியமனம்”…. அரசை அதிரவைத்த 5 முக்கியக் குற்றச்சாட்டுகள்….. முதல்வருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம்….!

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

திண்டுக்கல் எம்.எஸ்.பி. ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு பேரவை அரங்கை வந்தடைந்தது. மாநில தலைவர் மு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை மாநில தணிக்கையாளர் ச.முபாரக் அலி வாசித்தார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச் செயலாளர் சோமசுந்தரம், “தற்போதைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான போக்கையும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது. முந்தைய அதிமுக, திமுக ஆட்சிகளைப் போலவே தற்போதைய அரசும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளது” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

   

மேலும், ஒப்பந்த அடிப்படையிலும் வெளிமுகமை மூலமாகவும் பணியாளர்களை நியமிக்கும் அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்குச் சங்கம் சார்பில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, எம்.ஆர்.பி செவிலியர்களை மாவட்ட முகமைகள் மூலம் நியமிக்கும் அரசாணை மற்றும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவுகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

   

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோரை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, டி.ஏ.பி.எஸ் திட்டக் குளறுபடிகளைச் சரிசெய்வது, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது உட்பட 45-க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் இப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

 

முதலமைச்சரையோ அல்லது உயர் அதிகாரிகளையோ நேரில் சந்தித்து மனு அளிக்கக்கூட முடியாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அரசு உடனடியாகத் தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் மாநிலச் செயற்குழுவின் முடிவின்படி சென்னையில் அரசுக்கு எதிராகப் பிரம்மாண்டமான அடுத்தகட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.