நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்லியாறு பகுதியில் அதிகபட்சமாக 25 செ.மீ. (250 மி.மீ.) அதிதீவிர கனமழை பதிவாகியுள்ளது. மேலும், கீழ் கோத்தகிரி எஸ்டெட்டில் 20 செ.மீ., அலக்கரை எஸ்டெட்டில் 16.1 செ.மீ. மற்றும் கோத்தகிரியில் 13.7 செ.மீ. அளவிலும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்திலுள்ள 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுளது.
இந்த கனமழையின் கோரத் தாண்டவத்தால் மேட்டுப்பாளையம்–உதகை மலைப்பாதையில் திடீரென கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. இதில் அவ்வழியாகச் சென்ற தமிழக அரசுப் பேருந்து ஒன்று மண்சரிவில் சிக்கி முன்பகுதி பலத்த சேதமடைந்தது; எனினும், பேருந்தில் பயணம் செய்த 9 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான போக்குவரத்து முற்றிலாகவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் சரிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
