சொத்து வரி உயர்வு வாபஸ்…! நிம்மதியில் பெருமூச்சு விட்ட மக்களுக்கு அரசு வைத்த ‘செக்’… அதிரடி உத்திரவு…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மறுமதிப்பீட்டின் மூலம், சொத்து வரியானது சில இடங்களில் பல மடங்கு திடீரென உயர்த்தப்பட்டது. தங்களது வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களில் எந்தவித கூடுதல் கட்டுமானமும் செய்யாத நிலையிலும், முகப்பேர், மேற்கு மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை வரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

இது அனைத்து மக்களுக்கான பொதுவான வரி உயர்வு அல்ல என்றும், விடுபட்ட மற்றும் நீண்டகாலமாகக் குறைவான வரி செலுத்துவோரை முறைப்படுத்தும் வழக்கமான நடவடிக்கை என்றும் அதிகாரிகள் தரப்பிலிருந்து ஆரம்பத்தில் கூறப்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு கூடுதல் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையானது மாநகராட்சி மன்றத்தின் எவ்வித ஒப்புதலோ, முறையான கலந்தாய்வோ இன்றிச் சில அதிகாரிகளால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்பதைச் சென்னை மேயர் பின்னர் உறுதிப்படுத்தினார்.

   

பொதுமக்களின் கடுமையான மற்றும் தொடர் அழுத்தத்தின் விளைவாக, உயர்த்தப்பட்ட சொத்து வரி நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, பழைய வரி விகிதமே தொடரும் என அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், திருத்தப்பட்ட புதிய வரியை முன்கூட்டியே செலுத்தியவர்களுக்கு அத்தொகை ரொக்கமாகத் திருப்பித் தரப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக இனிவரும் அரையாண்டுகளுக்கான சொத்து வரித் தவணைகளில் அந்தத் தொகை ஈடுகட்டப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.