தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கான வாய்ப்புகள் உருவாகி, 80 களில் 90 களில் அவர் உச்ச நடிகரானார். 80 களில் அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது அவருக்குக் கதாநாயகனாக நடிக்க சில படங்களில் வாய்ப்புகள் வந்தன. பிறந்தேன் வளர்ந்தேன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் சரியாக ஓடாததால் மீண்டும் காமெடியனாகி கதாநாயக நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்று கொடிகட்டிப் பறந்தார்.
கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். அப்படி ஒரு பேட்டியில் ஒருமுறை நிரூபர் ஒருவர் அவரை பேட்டி எடுத்த கிரிஞ்ச் தனமான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அந்த நிரூபர் “16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. ஏதாவது வறுமையா” எனக் கேட்டுள்ளார்.
அதற்குக் கவுண்டம்ணி உடனடியாக இடைமறித்து ”அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்’ ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.” என தக்லைஃப் பதிலைக் கூறியுள்ளார்.
இந்த மாதிரி அணுகுமுறையால் கவுண்டமணி தனித்த ஒரு நடிகராக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.