குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்த 26 வயதுடைய ருத்விக் மக்வானா என்பவர், வாடிக்கையாளர்களுக்குச் சேர வேண்டிய பார்சல்களைத் திருடி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் ரூ.4.60 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாவ்நகர் பகுதியில் உரிய ரசீதுகள் இன்றி சந்தேகத்திற்கிடமான முறையில் செல்போன்கள் மற்றும் மின்னணுப் பொருட்களை அவர் விற்பனை செய்ய முயன்றபோது போலீஸாரிடம் சிக்கினார். விசாரணையில், டெலிவரி செய்ய வேண்டிய விலை உயர்ந்த பார்சல்களை உரியவர்களிடம் ஒப்படைக்காமல், கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவற்றைத் திருடித் தனியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து கூகுள் பிக்சல், சாம்சங், விவோ உள்ளிட்ட 13 செல்போன்கள், ஆப்பிள் ஏர்பாட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4,60,512 எனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் தொடர்புடைய காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
