தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தன் முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தவெக அரசின் 100 நாள் மக்கள் நலச் சாதனைகளே இந்த இடைத்தேர்தல்களில் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது ஊழலற்ற நேர்மையான ஆட்சி முறைத் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜி.கே.வாசன், அனைத்துத் துறைகளிலும் லஞ்ச லாவண்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டினார். தமாகா தலைவர்களும் தொண்டர்களும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த நல்லாட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிய அவர், இ முடிவை ஏற்றுத் தவெக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் தொடர்பு கொண்டு தமக்கு நன்றி தெரிவித்ததாகவும், விரைவில் தேர்தல் களத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் கூறினார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றும், அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல் என்றும் கடுமையாகச் சாடினார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகும் கர்நாடகா காட்டும் பிடிவாதம் தேவையற்றது என்றும், கூட்டாட்சி தத்துவத்தை மதித்து அம்மாநில அரசு உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமாகா ஏன் விலகியது எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது எங்களுக்கே மறந்து போச்சு, நீங்க ஞாபகப்படுத்துறீங்களா?” எனத் தனக்கே உரிய பாணியில் சிரித்தபடி நகைச்சுவையாகப் பதிலளித்தார். தவெக அரசின் சாதனைகளை முன்வைத்து இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமாகாவின் இந்த ஆதரவு கூட்டணி வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
