தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நாளுக்கு நாள் மிகப்பெரிய சண்டையாகவே மாறி உள்ளது. ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இவர்கள் இருவரின் சண்டை பொது மேடைகளில் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் என பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவிட்டது. இறுதியாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க ராமதாஸ் ஆத்திரமடைந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் பாமகவின் மாம்பழ சின்னமும் சமீபத்தில் முடக்கப்பட்டது. மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியதை மறுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில் மாம்பழம் சின்னம் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக சொல்லிவிட்டார்கள் என பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர் ராமதாஸ் தான் நிறுவனர். தலைவர் எல்லாமே. அவர்தான் கூட்டணி முடிவை எடுப்பார். அவர் தொடங்கிய கட்சியை அவரே ஏன் கலைக்க வேண்டும்? தேவைப்பட்டால் மட்டும் சிவில் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்துள்ளார்.
