இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளைத் தந்தாலும், மறுபுறம் சில இளைஞர்கள் அதனைத் தவறான முறையில் பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் அவலம் தொடர்கிறது. காதலிக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை வைத்துப் பெண்களை மிரட்டுவதும், அவர்கள் காதலை முறித்துக் கொண்டால் பழிவாங்கும் நோக்கில் அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜயபுரா மாவட்டம் பண்டல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஜெயஸ்ரீ என்பவருக்கும், ஸ்ரீஷைல் என்ற வாலிபருக்கும் இடையே கடந்த ஓராண்டாகக் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜெயஸ்ரீ காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனை ஏற்க முடியாத ஸ்ரீஷைல், மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தித் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீயின் பெற்றோர் அவருக்கு வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தனர். இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த ஸ்ரீஷைல் ஒரு கீழ்த்தரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
முன்னாள் காதலி என்ற கடுகளவு மனிதாபிமானமும் இன்றி, ஜெயஸ்ரீயுடன் முன்பு நெருக்கமாக இருந்த அந்தரங்கப் புகைப்படங்களை ஸ்ரீஷைல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், ஜெயஸ்ரீயைத் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை தரப்பினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தனது அந்தரங்கப் படங்கள் பரவியதையும், நிச்சயம் செய்யப்பட்டத் திருமணம் நின்றதையும் அறிந்த ஜெயஸ்ரீ, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, ஊர் வாய்க்குப் பயந்து தனது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
ஒரு பெண்ணின் மானத்தையும் வாழ்வாதாரத்தையும் சிதைத்த ஸ்ரீஷைல் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக்காதலாலோ அல்லது பழிவாங்கும் உணர்ச்சியாலோ ஒரு உயிரைப் பறிக்கும் இத்தகையச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. காதலிக்கும்போது பகிரப்படும் தனிப்பட்ட விஷயங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது துணிச்சலாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் தேவையையும் இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
