உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகள் மற்றும் 18 குழந்தைகளைக் கொண்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர், தனது கள்ளக்காதலி மற்றும் அவரது சகோதரரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்பூர் மாவட்டம், சுமேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னா என்பவர், நிஷா மற்றும் பனோ என்ற இரண்டு மனைவிகளுடன் வசித்து வந்தார். ஒவ்வொரு மனைவிக்கும் தலா ஒன்பது குழந்தைகள் என மொத்தம் 18 பிள்ளைகள் இருந்தபோதிலும், முன்னாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமன் தேவி என்ற கைம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதால், முன்னா தனது குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு சுமன் தேவியுடன் அவரது வீட்டிலேயே தங்கத் தொடங்கியுள்ளார்.
இவர்களது உறவுக்கு சுமன் தேவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இடையில் முன்னாவிற்கும் சுமன் தேவிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் முன்னாவுடன் பழகுவதை சுமன் தேவி தவிர்க்க முயன்றார். ஆனால், முன்னா அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த சுமன் தேவி, தனது சகோதரருடன் இணைந்து முன்னாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். கடந்த மார்ச் 18-ஆம் தேதி, “நான் எனது தாய் வீட்டில் இருக்கிறேன், அங்கே வாருங்கள்” என நயவஞ்சகமாக முன்னாவை வரவழைத்துள்ளார்.
சுமன் தேவியின் அழைப்பை நம்பி அங்கு சென்ற முன்னாவை, மறைந்திருந்த சுமன் தேவியும் அவரது சகோதரரும் சேர்ந்து கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, அவரது சடலத்தைச் சாக்குப்பையில் கட்டி அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். இதற்கிடையில், கணவரைக் காணவில்லை என அவரது முதல் மனைவி நிஷா காவல்துறையில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், முன்னாவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது சுமன் தேவியின் தொடர்பு அம்பலமானது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனது சகோதரருடன் சேர்ந்து முன்னாவைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சாக்கடையில் இருந்து முன்னாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மனைவிகள் மற்றும் 18 குழந்தைகளைத் தவிக்க விட்டு, கள்ளக்காதலியால் ஒரு குடும்பத் தலைவர் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
