நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் – தனலட்சுமி தம்பதியின் 8 வயது மகள் ரக்ஷிதா. இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழாவிற்கான நடன ஒத்திகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரக்ஷிதா நடனமாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவரது தலையில் விஷப்பூச்சி ஒன்று விழுந்து கடித்ததாகக் கூறப்படுகிறது.
பூச்சி கடித்த வேகத்தில் சிறுமி ரக்ஷிதா திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் அங்கிருந்தவர்களும், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரக்ஷிதாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஒத்திகையின் போது உடனிருந்தவர்களிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த அசம்பாவிதம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வகுப்பறையில் புத்தகப் பையில் இருந்த பாம்பு கடித்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அந்தத் துயரம் மறைவதற்குள், தற்போது நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து பள்ளி சிறுமி உயிரிழந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகங்களை முறையாகப் பராமரிக்கவும், புதர்களை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
