காணாமல் போன 7 வயது சிறுமி… தாய் சிக்கிய வலையில் உடைந்த சீக்ரெட்… சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

By Nanthini on ஐப்பசி 24, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், துப்பு எதும் கிடைக்காததால் இவ்வழக்கு கடந்த 21ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்பி ஜவஹர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் வீட்டிலும், அக்கம்பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது சிறுமியின் தாயார் பவானி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறுவது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாய்மொழியாகக் கூறிய தகவல்களுக்கும், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான புகாருக்கும் முரண்பாடுகள் இருப்பதால், அவர் உண்மையை மறைப்பதாக புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், கிணறுகள், கரும்புத் தோட்டங்கள் மற்றும் குப்பைக் கூலங்கள் என பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.

   

தொடர்ந்து 12 நாட்களாக சிறுமியின் நிலை என்னவென்பது தெரியவராத நிலையில், அவர் உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறுமி வெளிநபர்களால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தாயாரிடம் தொடர்ந்து மூன்று தினங்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் முழுமையான தகவல்களை அளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

   

இந்த மர்மமான வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கிராம மக்களிடமும், உறவினர்களிடமும் விசாரணை நடந்து வரும் நிலையில், சிறுமி ஹேமலதா எங்கிருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்ற உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.