விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிறுமி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 35 வயதான பவானி என்பவர், கோனானூர் அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல் அருகே சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோயிலில், வயதான தம்பதி ஒருவருடன் காணாமல் போன சிறுமி ஹேமலதாவைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இது குறித்து அவசர உதவி எண் 100-ஐத் தொடர்பு கொண்டு காவல் துறைக்குத் தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் பவானியிடம் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த விசாரணை என்ற பெயரில் போலீசார் எல்லை மீறி செயல்படுவதாக பவானி வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். தான் பணிபுரியும் இடம் வரை சென்று தனது குடும்பப் பின்னணி, சொந்த வாழ்க்கை மற்றும் தன் ஒழுக்கம் குறித்து அநாவசியமாக விசாரித்து தமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக அவர் புலம்பியுள்ளார்.
“ஒரு சிறுமி காணாமல் போன செய்தி அறிந்து, மனிதாபிமான அடிப்படையில் தான் பார்த்ததை உண்மையாகவும் பொறுப்போடும் அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால், காவல் துறை நடத்தும் இந்த விசாரணை முறை எனக்கு மிகுந்த அவமானத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. எதற்காக இந்தத் தகவலைக் கூறினோம் என்று நினைக்கும் அளவுக்கு என்னை வருந்த வைத்துவிட்டார்கள்” என அங்கன்வாடி சமையலர் பவானி கண்ணீருடன் பேட்டியளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
