தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நான்கரை வயது இருக்கும் போது அவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி என்ற இரு பெரும் ஆளுமைகள் இருந்த போதும் கமல்ஹாசன் என்ற அந்த குழந்தையின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் எல்லாம் அவரை அழைத்துக் கொண்டு காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய சம்பவமும் நடந்தது. படம் வெற்றிகரமாக ஓடிய தியேட்டர்களுக்கு படத்தின் கதாநாயகன் கதாநாயகி ஆகியோரை அழைத்துச் சென்று ரசிகர்களை மகிழ்விப்பதுதான் அப்போது வாடிக்கை. ஆனால் களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி ஆகிய இருவரையுமே தூக்கி சாப்பிட்டு விட்டாராம்.
அந்த பட உருவாக்கத்தின் போதே ஜெமினி கணேசன் படக் கதையில் அதிருப்தியாக இருந்தாராம். ஏவிஎம் குமரனை அழைத்து “என்னய்யா என்னையும் சாவித்ரியையும் போட்டுவிட்டு காதல் காட்சி எதுவும் எடுக்காமல் அந்த பையனை வைத்தே எடுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஏவிஎம் குமரன் கதை அப்படி சார் என சொல்லியுள்ளார்.
படம் ரிலீஸாகி கமல்ஹாசன் பிரபலம் ஆனதும், அவரை தியேட்டருக்கெல்லாம் அழைத்துச் சென்று ஏவிஎம் நிறுவனம் பிரபலப்படுத்தியதும் ஜெமினி கணேசன் கொஞ்சம் பொறாமைப் பட்டாராம். இதை ஏவிஎம் நிறுவனத்திடம் வெளிப்படையாக தெரிவித்தும் கொண்டாராம். இந்த தகவலை ஏவிஎம் நிறுவனர் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் குமரன் தெரிவித்துள்ளார்.
