ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாகத் தமிழக முதல்வர் எஸ். ஜோசப் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் எக்ஸ் தளத்தில் ஆதாரங்களுடன் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகள் திமுக ஆட்சிக் காலத்தில் முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வில்சன், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது பதிவில் வழக்கு சார்ந்த காலவரிசையைக் சுட்டிக்காட்டியுள்ள வில்சன், சர்ச்சைக்குரிய காவல்துறை அறிக்கை 20.02.2026 அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலதிக ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு இருந்தபோதிலும், 2026 மே மாதம் முதலமைச்சராகப் பதவியேற்று உள்துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஜய், அந்த அறிக்கையைத் திரும்பப் பெறவோ அல்லது மேலதிக விசாரணை கோரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிட்டதே தவெக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தான் என்றும், ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அந்த வாதத்தை நிராகரித்ததாகவும் வில்சன் அம்பலப்படுத்தியுள்ளார். அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்காத நீதிபதி, அடுத்த நான்கு வாரங்களுக்குள் மேலதிக விசாரணை நடத்த உத்தரவிட்டதால் தான் வழக்கு உயிர்ப்புடன் உள்ளது என்றும், எனவே இதற்கான பெருமையை முதலமைச்சர் விஜய் சொந்தமாக்கிக்கொள்ள முயல்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் தட்டச்சுப் பிழை தொடர்பான சான்றுகளையும் இணைத்துள்ள வில்சன், ஆன்லைன் நகலில் சரியான தேதியான 19.06.2026 குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதுமே அனைவரின் முதன்மையான விருப்பம் என்றும், எனவே எந்தவிதமான அடிப்படை நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் “வீர வசனங்களை” மட்டும் பேசுவதை முதல்வர் விஜய் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
