பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியுடன் அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், அந்த விழாவில் ஜெம் வீரமணியை தனது “குடும்ப நண்பர்” என லோகேஷ் பேசிய வீடியோவும் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது. ஒரு பாலியல் குற்றவாளியுடன் அமைச்சர்கள் மேடையைப் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள காலவரிசையையும் உண்மையான தகவல்களையும் ஆராயும்போது தெளிவான சூழல் தெரியவருகிறது.
ஜெம் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று புகார்கள் எழுந்ததை அடுத்து, அக்டோபர் 7-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், போதிய ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இவ்வழக்கை முடித்துவைத்து (Closure Report) போக்சோ நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். எனினும், வழக்கில் வீடியோ ஆதாரங்கள் இருக்கும் நிலையில் எவ்வாறு வழக்கை முடிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய போக்சோ சிறப்பு நீதிபதி பத்மா, ஆகஸ்ட் 19 அன்று இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டார். இதன் பின்னரே, ஆகஸ்ட் 29 அன்று ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர்கள் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் ஜெம் வீரமணியுடன் கலந்து கொண்டதாகக் கூறப்படும் நிகழ்வு, பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமி எழுதிய “வீழ்ந்த மனிதர்கள்” என்ற புத்தக வெளியீட்டு விழாவாகும். இந்த விழா ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்றது. அதாவது, காவல்துறையால் வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டிருந்த காலகட்டத்திலும், நீதிபதி மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பாகவும் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. தொழிலதிபரான வீரமணி பெரும்பாலான அரசியல் தலைவர்களுடன் நட்பு ரீதியில் இருந்ததால், வழக்கின் பின்னணி அறியாத நிலையில் அமைச்சர் அவரை “குடும்ப நண்பர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆகஸ்ட் 19-ஆம் தேதி நீதிபதி பத்மாவின் தலையீட்டுக்குப் பிறகே ஜெம் வீரமணியின் மோசமான செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டிருந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டதை வைத்து, அவர்கள் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற விமர்சனமாகும். நீதிபதி பத்மாவின் அதிரடி உத்தரவால் மீண்டும் சூடுபிடித்துள்ள இந்த வழக்கு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
