பழனி கோயில் நிலப் பதிவில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துச் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி இந்திராணி சுடலைமுத்துவை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக அரசு ஏன் நிலத்தை வாங்கியவர்களின் முழு விபரங்களை வெளியிடத் தயங்குகிறது என்று அவர் எக்ஸ் தளத்தில் வினவியதே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். அரசின் இத்தகைய செயலுக்கு அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு, ஆளும் தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விமர்சிப்பவர்களின் குரலை ஒடுக்கப் பார்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், தவெக அரசு மேடைகளில் முழங்கிய ‘மாற்றம்’ என்பதன் நிஜமான அர்த்தம் இதுதானா என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். எளிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு அரசு அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது என்றும், உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரியும் வேளையில் மக்கள் சார்பில் கேள்வி கேட்பவர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரரிப்பது அநீதி என்றும் அவர் சாடியுள்ளார். தவெக அரசின் இத்தகைய சகிப்புத்தன்மையற்ற போக்கை விடுத்து இந்திராணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
