நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் தேவையற்ற வதந்திகளை முறியடிக்கவும், விநியோகச் சங்கிலியைச் சீராகப் பராமரிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, காவல் துறை மற்றும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடமிருந்து தலைமைச் செயலாளர்கள் விரிவான அறிக்கையைப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
