சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது. அப்போது இரயிலுக்குள் அமர்ந்திருந்த பயணி ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே இருந்த தோட்டத்தில் மரங்களில் கொத்துக் கொத்தாகத் தொங்கிய மாம்பழங்களைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்ததும் அவருக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இரயில் தான் நின்று கொண்டிருக்கிறதே, அதற்குள் வேகமாகச் சென்று இரண்டு மாம்பழங்களைப் பறித்து வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அவர் சட்டென்று இரயிலை விட்டு கீழே இறங்கி தோட்டத்தில் புகுந்து மாம்பழங்களைப் பறித்துள்ளார்.
அவர் மாம்பழங்களைப் பறித்து முடிப்பதற்குள், நின்று கொண்டிருந்த இரயில் மெதுவாக நகரத் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பயணி, மாம்பழங்களைக் கையில் பிடித்துக் கொண்டு இரயிலைப் பிடிப்பதற்காக அதன் பின்னால் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். ஆனால், அவரது சோதனை இத்துடன் முடியவில்லை. அந்த மாந்தோட்டத்தைக் காவல் காத்து வந்த காவலாளி அந்தப் பயணி மாம்பழங்களைத் திருடுவதைக் கவனித்துவிட்டார். இதனால் கோபமடைந்த காவலாளி, கையில் ஒரு தடிமனான குச்சியை எடுத்துக் கொண்டு அந்தப் பயணியின் பின்னால் வேகமாக ஓடினார்.
ஒருபுறம் வேகம் எடுக்கும் இரயில், மறுபுறம் பின்னால் துரத்தி வரும் காவலாளி என அந்தப் பயணியின் நிலைமை மிகவும் மோசமானது. எப்படியோ இரயிலின் கதவைப் பிடித்து உள்ளே ஏற முயன்றார். ஆனால் அதற்குள் பின்னால் வந்த காவலாளி, இரக்கமே இல்லாமல் அந்தப் பயணியின் பின்பக்கத்தில் குச்சியால் பலமாக அடிக்கத் தொடங்கினார். அடி தாங்க முடியாமல் பயணியின் கையில் இருந்த மாம்பழங்கள் கீழே விழுந்தன. இறுதியாக, அடி வாங்கிக் கொண்டே எப்படியோ இரயிலுக்குள் ஏறி தப்பித்தார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “20 ரூபாய் மாம்பழத்திற்கு ஆசைப்பட்டு, இப்போது 50 ரூபாய்க்கு அயோடெக்ஸ் (Idex) மருந்து வாங்க வேண்டியதாகிவிட்டது” என்று கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
