மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனால், அவர் எம்.பி. ஆகி தேசிய அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெஹராம்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் பேச அக்கட்சி முடிவு செய்ததாகக் கூறப்பட்டது.
பழைய நட்பின் அடிப்படையில், யூசுப் பதானிடம் பேசி அவரது எம்பி பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்கும் தூதுவர் பொறுப்பை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகிப் பரவின. இந்த விவகாரம் அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து சவுரவ் கங்குலி தற்போது விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், “இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி” எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
