தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன். பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன். தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன. தான் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த போது தன்னை இயக்குனர் ஆக்கியது தன்னுடைய அண்ணன் இளையராஜாதான் எனக் கூறியுள்ளார் கங்கை அமரன்.
அதன் பின்னர் அவர் இயக்கிய கோயில்காளை, கரகாட்டக்காரன், சின்னவர் உள்ளிட்ட படங்கள் சூப்பர்ஹிட்டாகின. அதன் பின்னர் தன்னுடைய மகன் வெங்கட்பிரபுவைக் கதாநாயகன் ஆக்கி அவர் எடுத்த பூஞ்சோலை திரைப்படம் ரிலீஸாகவே இல்லை. அதன் பின்னர் அவர் சினிமாவில் பாடல் ஆசிரியராக மட்டும் பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் கூட இளையராஜா காப்பிரைட் விவகாரத்தில் நஷ்ட ஈடு கேட்பது குறித்து அவருக்கு சாதகமாக கங்கை அமரன் பேசி இருந்தார். இப்படியான நிலையில் ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன் சார்பாக பாடுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குற்றம் தவிர்.

இந்த திரைப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்துள்ள நிலையில் ஆனந்த் பாபு, சென்ட்ராயன், ஜார்ஜ் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ள நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கங்கை அமரன், படம் குறித்து பத்திரிக்கையில் இரண்டு அறிவிப்பு வந்தும் அதில் இரண்டிலும் இசை ஸ்ரீகாந்த் தேவா என்பது குறிப்பிடப்படவில்லை. இது எதனால் என்பதற்கு பி ஆர் ஓ பதில் சொல்ல வேண்டும்.

படத்தின் இன்விடேஷனில் ஏன் இசை ஸ்ரீகாந்த் தேவா என குறிப்பிடப்படவில்லை என்பதை பிஆர்ஓ மற்றும் இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். இருவரும் வந்து மறந்து விட்டதாக பதில் சொன்ன நிலையில் மேடை இலையை இருவரையும் ஶ்ரீ காந்த் தேவாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் கங்கை அமரன். இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இசை தான் அதை எப்படி நீங்கள் தவற விடலாம் என்று மேடையில் கங்கை அமரன் கண்டித்தார்.
