மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டத்தில், செய்வினை மற்றும் மாந்திரீகம் செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அண்டை வீட்டார் ஒருவரை ரூ.1.20 லட்சம் பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலை வழக்கில் முக்கிய சதிகாரர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 21 அன்று லமர்வா கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்குச் சென்ற தாரேந்திர யாதவ் என்ற நபர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தேடி வந்த நிலையில், மறுநாள் போரியா நாலா என்ற பகுதிக்கு அருகில் தாரேந்திர யாதவ் தொண்டை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மர்மக் கொலையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த அன்று இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நபர் நள்ளிரவில் துணிகளைத் துவைத்ததை அறிந்து, அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கொலைக்கான முழுப் பின்னணியும் அம்பலமானது. தாரேந்திர யாதவின் அண்டை வீடான ராஜா யாதவ் என்பவருக்கு, தாரேந்திரா தன் குடும்பத்தின் மீது செய்வினை மற்றும் மாந்திரீகம் செய்வதாகவும், அவரது ‘கருப்பு சக்திகள்’ தன் குடும்பத்தை அழித்து வருவதாகவும் தீவிரமான சந்தேகம் இருந்துள்ளது. இந்த ஆத்திரத்திலும், நிலவிய முன்விரோதத்தாலும் தாரேந்திராவைக் கொலை செய்ய அவினாஷ் யாதவ் என்பவருக்கு ராஜா யாதவ் ரூ.1.20 லட்சம் தந்து கொலை ஒப்பந்தம் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி, அவினாஷ் யாதவ் பிச்சியா பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களை இந்தச் சதியில் இணைத்துக் கொண்டுள்ளார். திருமண விழாவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த கும்பல், தாரேந்திராவை தங்களோடு அமர வைத்து முதலில் மது குடிக்க வைத்துள்ளது. பின்னர் அவரை ஒரு ஆள்நடமாட்டமில்லாத பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இது ஏதோ விபத்து அல்லது இயற்கை மரணம் போலக் காட்டுவதற்காக உடலை ஓடைக்கு அருகில் வீசிச் சென்றுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து குற்றவாளிகளும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இந்த மூடநம்பிக்கைக் கொலை குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் மண்ட்லா மாவட்ட எஸ்பி ராஜேஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
