உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டம் கேர்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தலித் சிறுமி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மாலை வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிய நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி காலை அவர் அப்பகுதியிலுள்ள வயலில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், அவர் இறந்துவிட்டதாக எண்ணி கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது ஆக்ரா எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி பேச முடியாத நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விரைவு நீதிமன்றம் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த பாதுகாப்பு மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
