அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது நடன மாணவியான மேடிசன் புரூக்ஸ், மதுபான விடுதி ஒன்றில் சந்தித்த மூவரால் காரின் பின் இருக்கையில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதிகளவில் மது அருந்த வைக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் இருந்த அவரை, அந்த கும்பல் காரில் இருந்து நடுரோட்டில் தூக்கி வீசி எறிந்துள்ளது. மேடிசன் தடுமாறியபடி நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற போது, வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட டெஸ்மண்ட் கார்ட்டர், கைவோன் வாஷிங்டன் மற்றும் கேசன் கார்வர் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டதாக குற்றவாளிகள் தரப்பு வாதிட்டாலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய வாஷிங்டன் மீது மற்றொரு பெண் கொடுத்த பாலியல் புகாரும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கொடூர வழக்கு வருகின்ற ஆகஸ்ட் 17 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
