அஸ்ஸாம் மாநிலத்தின் ஹைலாகண்டி பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர் வீட்டின் குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டுத் தனியாக வீடு திரும்பிய அச்சிறுமியை வழிமறித்த மர்ம கும்பல், அவரை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பியைச் செருகிச் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், சடலத்தின் அடையாளத்தைத் மறைக்கும் நோக்கில் தலையையும் முகத்தையும் சிதைத்து, அடர்ந்த காட்டுப் பகுதியில் தூக்கி வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
