டெல்லியில் தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், 2012-இல் நடந்த நித்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு காஷ்மீரி கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்தில் வைத்து இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் பேருந்தை டெல்லி காவல் துறையினர் உடனடியாகப் பறிமுதல் செய்து, தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பேருந்திலிருந்து மிக முக்கியமான அறிவியல் ரீதியான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
