தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஜஹாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரவூஃப் என்ற ஆட்டோ ஓட்டுநரை 2 முதல் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று மறித்துத் தாக்கியுள்ளது.
அந்தக் கும்பலின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த அப்துல் ரவூஃப் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராஜேந்திரநகர் துணை ஆணையர் எஸ்.ஸ்ரீனிவாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து இதுவரை தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
தப்பியோடிய கொலையாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யப் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். மேலும், இதே மைலார்தேவ்பள்ளி எல்லைக்குட்பட்ட பால்செருவு பகுதியில் புதன்கிழமை அதிகாலையிலும் மற்றொரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு கொலைச் சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பும் பீதியும் நிலவி வரும் நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
