தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.
ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் ஒருமுறை “நீங்கள் இயக்கியதில் உங்களைக் கவர்ந்த கருப்பு நிறம் கொண்ட நடிகை யார்?” என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் “நான் சில்க் ஸ்மிதாவைதான் சொல்வேன். நான் அர்ச்சனா, சில்க் ஸ்மிதா மற்றும் மௌனிகா ஆகியோரை இயக்கியுள்ளேன். அதில் சில்க் ஸ்மிதாவைதான் stunningly beautiful என்று சொல்வேன்.” எனப் பாராட்டியிருந்தார்.

அவர் மறைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சுகள், அவர் இறப்பைப் பற்றிய மர்மங்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போதும் அவரோடு பழகியவர்கள் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி இயக்குனரும் நடிகருமான ஜி எம் குமார் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் சில்க் ஸ்மிதா பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “சில்க் ஸ்மிதா மிகச்சிறந்த பெண்மணி. அவரோடு பழகியவர்களுக்கு அவள் மேல் செக்ஸ் சம்மந்தமான எண்ணங்களே வராது. நானும் பல்லவியும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவாள். இரவு 11 மணிவரை இருப்பாள், எங்களோடு சாப்பிடுவாள். அப்புறம் போய்விடுவாள். அவள் கடைசி வரை ஏதோ ஒன்றை தேடினாள். அவளுக்கு ஒரு நல்ல கம்பேனியானைத் தேடினாள். கடைசி வரை அவளுக்கு அது கிடைக்கவேயில்லை.” எனக் கூறியுள்ளார்.
