காவல்துறைக்கே சம்மன் செக்…. “இனி சம்மன் இல்லாமல் யாரையும் விசாரிக்கக் கூடாது”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும், புலன் விசாரணைக்கான முறையான வழிகாட்டுதல்களை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற போர்வையில் காவல்துறை தன் மீது எந்தவித துன்புறுத்தலும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் புலன் விசாரணையில் நீதிமன்றம் வழக்கமாகத் தலையிடுவதில்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரும்போது அதைக் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வெளிவந்துள்ள தெளிவான உத்தரவின்படி, காவல்துறையினர் ஒருவரை விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால், அதற்கு முறையாகச் ‘சம்மன்’ அனுப்பப்பட வேண்டும். அந்தச் சம்மனில் அவர் எந்தத் தேதியில், எந்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் நிலையக் குறிப்பேட்டில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்கு வருபவர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை மற்றும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைக் காவல்துறையினர் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி தம் உத்தரவில் அறுதியிட்டுத்துள்ளார்.