கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகன் செல்வராஜ் (35), அங்கு ஆட்டோ ஓட்டி வந்த சதீஷ் என்பவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். அப்போது சதீஷிற்கு செல்வராஜ் ₹500 கடனாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பேசுவதைத் தவிர்த்து வந்தனர்.
ஆனால், இருவரும் வழக்கமாகக் கூடும் அழகியமண்டபம் பகுதியில் உள்ள மதுக்கடையில், செல்வராஜ் போதையில் சதீஷிடம் கடன் பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மதுக்கடையில் வைத்து, செல்வராஜ் ₹500 கடனை திரும்ப கேட்டு சதீஷை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பரான மற்றொரு ஆட்டோ டிரைவர் சைஜூ ஆகிய இருவரும் சேர்ந்து செல்வராஜை சாலையில் தள்ளிவிட்டு, கட்டையால் சரமாரியாகத் தாக்கினர்.
படுகாயமடைந்த செல்வராஜை மருத்துவமனையில் சேர்த்ததைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், தக்கலை போலீசார் சதீஷ் மற்றும் சைஜூ மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
