OTP இருந்தா போதும்… இனி பீச், பார்க்குகளில் அன்லிமிடெட் ஃப்ரீ வைபை…. சென்னை மாநகராட்சியின் அதிரடி…!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள முக்கியக் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்களுக்காக இலவச உயர்வேக வைபை (Wi-Fi) வசதியை வழங்கும் புதிய திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்குத் தடையற்ற டிஜிட்டல் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சேவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, புகழ்பெற்ற மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ், திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய கடற்கரைப் பகுதிகளிலும், மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பிரதான பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களிலும் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை அமைப்பதற்கான விரிவான திட்டமிடல் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்தை விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு, முன்னணி இணைய சேவை வழங்கல் நிறுவனங்களான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஹாத்வே மற்றும் ஏசிடி ஃபைபர்நெட் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்வது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

   

பொதுமக்கள் தங்களது கைப்பேசி எண்களைப் பதிவு செய்து, அதன் மூலம் பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தி இந்த இலவச இணையச் சேவையை மிக எளிதாக அணுக முடியும். வாரநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பயனுள்ளதாக அமையும். இத்தொழில்நுட்ப முன்னேற்றம் சென்னையில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் அன்றாட நகர வாழ்வியல் அனுபவத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.