தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதி முன்னாள் செயலாளரான வேம்புலி பாலியல் தொல்லை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவருக்கு, வேம்புலி தனது மொபைல் போன் மூலம் தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். மேலும், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்த நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வேம்புலி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பரங்கிமலை போலீசார் வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, கட்சியின் ஒழுக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி வேம்புலியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தவெக தலைமை உடனடியாக நீக்கியது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவாக இருந்த வேம்புலியை, தீவிரத் தேடுதலுக்குப் பின் பெங்களூருவில் வைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
