அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் நேற்று திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பி.வி. பாரதியும் தனது கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 முதல் 2021 வரை சீர்காழி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பி.வி. பாரதி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் பவுன்ராஜ் போன்ற “நயவஞ்சகர்களுடன்” இணைந்து பணியாற்ற முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி, அவர்கள் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக வெளியேறி வருவது அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
