“அதிமுக இனி இருக்காது, அவங்க எல்லாரும் வராங்க”… மேடையிலேயே குண்டுகளை தூக்கிப்போட்ட செங்கோட்டையன்… எடப்பாடியின் கோட்டையிலேயே தவெக செய்யப்போகும் ‘அந்த’ சம்பவம்…!

By Nanthini on ஆனி 15, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய மாற்றுக் கட்சியினர் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அண்மையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தவெக அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வரவேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை கடுமையாக விமர்சித்ததோடு, அக்கட்சி தற்போது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக மாறிவிட்டது என்று சாடினார்.

   

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் முன்னிலையில் செல்வாக்கை இழந்து, இருக்கும் இடமே தெரியாமல் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கும் ஒரு முன்னாள் முதலமைச்சரை விரட்டியடித்த பெருமை தவெகவிற்கே சேரும் என்றார். எடப்பாடி தொகுதியில் தவெகவின் சின்னம் நின்றிருந்தால் பழனிசாமியின் நிலைமை மோசமாகியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ‘கொல்லை பேர அரசியலில்’ ஈடுபட முயன்றதாகவும், அதனை முறியடிக்கும் வல்லமை தளபதி விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றும் உறுதியளித்தார். மேலும், கட்சிக்காக 42 ஆண்டுகள் உழைத்த தன்னை அதிமுக தூக்கியெறிந்தபோது, தகுந்த மரியாதை கொடுத்து தாங்கியவர் விஜய் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

   

அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு அதன் தலைமை பழமையை மறந்ததே காரணம் என்று சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், இனி தமிழகத்தில் அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் போகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றார். தவெகவின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பல முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் ஏற்கனவே கட்சியில் இணைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் அதிமுகவைச் சேர்ந்த நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தவெகவில் இணைய உள்ளதாக அவர் அதிரடி தகவலை வெளியிட்டார். இக்கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.