“நாக்கு புழுத்துப் போகாதா?”…. விஜய்யை ஒருமையில் விளாசிய அதிமுக முன்னாள் அமைச்சர்…. அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக இடையே வார்த்தை போர் முற்றியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனின் ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விஜய் மறைமுகமாக விமர்சித்ததைத் தொடர்ந்து, பவானியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இதற்கு கருப்பணன் மிகக்கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார்.

விஜய்யின் அரசியல் விமர்சனங்களைச் சாடிய கருப்பணன், சினிமா டிக்கெட்டுகளை பல மடங்கு அதிக விலைக்கு விற்று மக்களின் பணத்தைச் சுரண்டியதாகக் குற்றம் சாட்டினார். ரசிகர் மன்றத்திற்கு 100 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்று 500 கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமியைப் பற்றிப் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு விமர்சிப்பவர்களின் “நாக்கு புழுத்துப் போகாதா?” என அவர் மிக ஆவேசமாகச் சாபம் விடுவது போலப் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், தவெக மாநாட்டின் போது உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்றும், வெறும் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது மட்டும் ஒரு தலைவனுக்கு அழகல்ல என்றும் அவர் விமர்சித்தார். “உயிரிழந்தவர்களின் வீட்டிற்குச் செல்லக் கூட முடியாத நீங்கள் ஒரு கட்சியை நடத்துகிறீர்கள், மற்றவர்களை மோசம் என்று சொல்ல உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?” என அவர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

   

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மக்களின் ஏழ்மையை உணர்ந்து திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள் என்றும், ஆனால் விஜய் மக்களைச் சுரண்டிப் பணம் சேர்த்த கூட்டணிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அரசியல் செய்வதாகவும் அவர் சாடினார். இதுவரை ஒருமுறை கூடப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் துணிவில்லாத விஜய், மற்றவர்களைக் கேலி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கருப்பணன் தனது உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.