சமீபத்தில் வெளியான தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் முன்னோடியில்லாத பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பையும் மீறி, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் தவெக வெற்றி பெற்று, முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் புதிய அரசு அமைந்தது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தவெக ஆட்சிக்கு ஆதரவளித்ததால் கடும் அதிருப்தியடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளைப் பறித்து, புதிய நிர்வாகிகளை நியமித்தார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டச் செயலாளராக சி.வி.சண்முகத்திற்குப் பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டார். இந்த அதிரடி மாற்றத்தால் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே கடும் கோஷ்டி மோதல் வெடித்தது. இதன் உச்சகட்டமாக, வல்லம் ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, பசுபதியின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவம் சி.வி.சண்முகம் மற்றும் அவரது சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணனின் தூண்டுதலால் தான் நடந்தது என பசுபதி அளித்த புகாரின் பேரில், அவர்கள் உட்பட 21 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். புதிய அரசுமைய அமைவதற்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது, அவரது ஆதரவாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த நடவடிக்கை முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரிலேயே எடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் கிளப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதை அடுத்து, எஃப்.ஐ.ஆர்-லிருந்து சி.வி.சண்முகத்தின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. தவறுதலான தகவலின் அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட்டதால் அது நீக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் நேரடி தலையீட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சி.வி.சண்முகம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட உயர் காவல்துறை அதிகாரி விரைவில் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
