மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய தூணாக அறியப்பட்ட நாகராஜ், தற்போது மதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் தவெகவில் இணைந்த இந்த அதிரடி முடிவு, திருப்பூர் மாவட்ட மதிமுகவினர் மத்தியிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டவர் நாகராஜ். அதுமட்டுமின்றி, மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அதனை பகிரங்கமாக எதிர்த்து வைகோவிற்கு ஆதரவாக மதிமுக தொண்டர்களை திரட்டிய பெருமைக்குரியவர். தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், நாகராஜின் இந்த திடீர் கட்சி மாற்றம் திருப்பூரின் அரசியல் சமன்பாடுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி மாறியது குறித்து பரவிய பல்வேறு விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள நாகராஜ், “கடந்த 33 வருடங்களாக மதிமுகவிற்காக என் வாழ்வை அர்ப்பணித்து, கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் செயல்பாடுகளிலும் விசுவாசத்தோடு பங்கேற்று வந்தேன். ஆனால், சமீபகாலமாக கட்சியில் எனது சுயமரியாதைக்குப் பாதிப்பு ஏற்பட்டதோடு, பல ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிட்டது. சில சூழ்நிலைகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதால் தான், ஒரு மாற்றம் தேவை என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தேனே தவிர, தலைமை மீதோ அல்லது கட்சி மீதோ எனக்கு எந்த விரோத உணர்வும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பதவி ஆசைக்காகக் கட்சி மாறவில்லை என்பதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், “2006-இல் திருப்பூர் நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்றபோதே திமுகவில் இணைய அழைப்பு வந்தது; பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால் அப்போதே சென்றிருப்பேன், அதை மறுத்ததால் என் பதவியே பறிக்கப்பட்டது. அதன்பிறகும் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோதும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சுயமரியாதை பாதிக்கப்பட்டதால் மட்டுமே இந்த முடிவை எடுத்தேன். 33 ஆண்டுகாலம் என்னோடு களமாடிய மதிமுக உறவுகளுக்கு நன்றி, அவர்களுடனான நட்பு என்றும் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
