விஜய் போட்ட மெகா பிளான்… தவெக-வில் இணையும் சகாயம் ஐஏஎஸ்?…. திருச்சி டூ டெல்லி… மாநிலங்களவை எம்பி ரேஸில் திடீர் திருப்பம்…!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு தவெக சார்பில் சகாயம் போட்டியிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

   

அதே வேளையில், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதன் காரணமாக சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியாகும் அந்த ஒரு இடத்திற்கு தவெக சார்பில் யாரை டெல்லிக்கு அனுப்புவது என்ற ரேஸிலும் சகாயத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நேர்மையான அதிகாரி என்று மக்களிடம் நல்ல பெயர் பெற்ற சகாயம், அண்மையில் நடைபெற்ற விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்றது இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. நிர்வாக அனுபவமும், தூய்மையான பிம்பமும் கொண்ட சகாயத்தை டெல்லியில் கட்சியின் பலத்த குரலாக ஒலிக்கச் செய்ய விஜய் விரும்புவதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது.

   

இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ரேஸில் சகாயத்திற்கு போட்டியாக அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதியான கு.ப. கிருஷ்ணனின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய அவரது அரசியல் அனுபவம் கட்சிக்கு உதவும் என ஒரு தரப்பு கருதுகிறது. மற்றொரு புறம், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியும் இந்த மாநிலங்களவை இடத்தைக் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் தவெகவின் முதல் பிரதிநிதியாக கட்சியின் சொந்த முகமே இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

 

அனுபவம் மிக்க அரசியல்வாதியான கு.ப. கிருஷ்ணனா அல்லது புதிய மற்றும் நேர்மையான முகமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயமா என்ற விவாதம் தவெகவுக்குள் தற்போது தீவிரமடைந்துள்ளது. சகாயத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது மாநிலங்களவை எம்பி-யாக டெல்லிக்கு அனுப்பப்படுவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், சகாயத்தின் அரசியல் வருகை தமிழக அரசியலில் குறிப்பாக தவெகவின் உட்கட்சி அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.